வெப்சைட், ஆன்லைனில் அட்டூழியம்... ஈரோட்டில் கள்ள லாட்டரி

அயராது உழைத்து அரும்பாடு பட்டு சம்பாதிக்கும் உழைப்பாளிகளின் ரத்தமான பணத்தை உறிஞ்சி பல குடும்பங்களை கெடுத்து பல ஆயிரம் உயிர்கள் பலியாக காரணமாக இருந்தது தான் லாட்டரி சீட்டு.



மக்கள் நலன் கருதி, கடந்த 2003-ஆம் ஆண்டு ஒற்றைச் சொல்லில் உத்தரவிட்டு லாட்டரியை தமிழகத்தில் ஒழித்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதன் பலனாகவே தமிழகத்தில் பல குடும்பங்கள் ஓரளவாவது நல்ல நிலைக்கு வந்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் லாட்டரி தொழில் தலை தூக்கி உள்ளது. ஆன்லைன் மூலமும் வெப்சைட்டுகள் மூலமும் போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன என்று புலம்புகின்றனர் ஈரோட்டை சேர்ந்த சமூக நல ஆர்வலர்களும், இளைஞர்களும். இதுகுறித்து நமது புலனாய்வு செய்திக்குழுவின் மூலம் கள ஆய்வினை நடத்தினோம். அப்போது, பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கூறியது:


ஈரோடு மாவட்டத்தில் வெப்சைட் மூலம் லாட்டரி வியாபாரம் படுஜோராக நடக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குலுக்கல் என்ற பெயரில் மக்கள் பணம் அதிரடியாக பட்டப்பகல் கொள்ளையாக சுருட்டப்படுகிறது.



ஜாக்பாட், சன் லாட், லக்கி வின்லாட், ஈரோ லாட் பவர் பால், போன்ற வெப்சைட்டுகள் ஈரோடு மாவட்டத்தில் பிரபலமாய் லாட்டரி வியாபாரத்தை நடத்துகின்றன. வெப்சைட் மூலம் செய்யப்படும் இந்த லாட்டரி சீட்டுக்கு உடலுழைப்பு தொழிலாளிகள் முதற்கொண்டு கல்லூரி மாணவர்கள், நவ நாகரீக இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் அடிமையாகி கிடக்கின்றனர். ஏராளமான பணத்தை இந்த லாட்டரிகளை வாங்கி இழந்தாலும், இன்னொரு நாள் இதே லாட்டரியில் பணம் கிடைக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில், இதுகுறித்து புகார் ஏதும் செய்யாமல் பணத்தை இழந்து விட்டு அழாத குறையாக வீடு செல்கின்றனர்.


ஆன்லைன் மற்றும் வெப்சைட் மூலம் லாட்டரி விற்பனையை எஸ்விஎல் லாட்டரி ஏஜென்சி உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரும், சிங்கப்பூர் ராஜா என்கிற குணசேகர் ஆகியோரும் கனஜோராக நடத்தி வருகிறார்கள். இவர்களின் கள்ள லாட்டரி ஆட்டம், ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையம், பள்ளிபாளையம், மூலப்பட்டறை, வீரப்பன் சத்திரம், சூளை, சித்தோடு, கொங்காலம்மன் வீதி, சூரம்பட்டி வலசு, சென்னிமலை ரோடு, பெருந்துறை ரோடு,பன்னீர்செல்வம் பார்க், மூலப்பட்டறை, காளைமாட்டு சிலை, பெரியார் நகர்,வா.உ.சி பார்க் உள்பட இடங்களில் பட்டவர்த்தனமாகவே நடக்கிறது.



200 மேற்பட்ட வியாபாரிகளை கொண்டு ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையை மிக ஜோராக நடத்தி வருகின்றனர். இதில் நவீன முறையில் விற்பனையில் இடம்பிடித்துள்ளது ஈரோ லாட் பவர் பால். அதாவது பாலுக்குள் நெம்பர் என்ற முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் நடத்துகிறார்கள். வெப்சைட்டில் நடத்தி வாட்ஸ் ஆப்பில் கலக்கி கள்ள லாட்டரி சந்தையில் தமிழகத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். இந்த லாட்டரி சீட்டு குலுக்கல் கடந்த காலங்களில் நடந்த ஒரு நம்பர் லாட்டரி போலவே பலரை அடிமையாக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு மணி நேரமும் ஏதாவது பணம் சம்பாதித்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் ஈரோடு இளைஞர்கள் தாலி, தண்டை முதற்கொண்டு எல்லாவற்றையும் அடமானம் வைத்து இந்த லாட்டரி வாங்கி ஏமாந்து போவது நிமிடத்துக்கு நிமிடம் நடக்கிறது. ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, ஒரு சில நபர்களின் ஆசியுடன் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. 


இதன் மையப் பகுதியாக ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள அபிட்டோ துணிக்கடை வியாபாரிகளின் சங்கமம் ஆகும். இப்படி அசால்டாக நடக்கும் வெப்சைட் கள்ள லாட்டரியின் பின்னணி குறித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் நமக்கு கிடைத்தது. வழக்கமாக ஆன்லைன் லாட்டரி என்றாலே வெளிநாடுகளில் இருந்து நடக்கும் நம் ஊரில் ஒரு சிலர் வாங்கி விற்பார்கள். ஆனால் ஈரோட்டில் நடக்கும் ஈரோ பவர் பால் உள்ளிட்ட லாட்டரிகளின் உரிமையாளர்கள் வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் இல்லை . ஈரோடு மாவட்ட கள்ள லாட்டரி கும்பலான எஸ்விஎல் சிவசுப்பிரமணியன், சிங்கப்பூர் ராஜா குணசேகரன் ஆகியோர் தான் என்கிறார்கள். கள்ள லாட்டரி வாங்கி விற்பவர்களே லட்சக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையாக சம்பாதிக்கும் நிலையில், ஈரோட்டு லாட்டரி கும்பலோ தனிசீயாக வெப்சைட் போட்டு, ஆன்லைன் லாட்டரி கம்பெனியே நடத்தி கோடிகளில் கொள்ளையடிக்கிறது.



இதற்காக தங்கம், குயில் என்ற பெயர்களில் நம்பர் போட்டு சீட்டும் அடித்து கிளப்புகிற்ரார்கள். என்கிறார்கள். இவர்களிடம் லாட்டரி வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை விட்ட பழைய வாடிக்கையாளர்கள். பகுத்தறிவுக்கு பெயர் பெயர் பெற்ற ஈரோட்டில் இப்படி பகல் கொள்ளையாக நடக்கும் லாட்டரி விற்பனையை தடுக்க ஈரோடு மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஈரோடு வாழ் சமூக நல ஆர்வலர்கள்.. செய்வீர்களா... அய்யா?